காலத்தை வென்றவர்கள்...

 சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் ஜெயலலிதா. இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அரசியல் நுழைவு


எம்.ஜி.ஆர். வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1984 டிசம்பரில் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., - கூட்டணி வெற்றி பெற்றது. இதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது. எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் 1987ல் ஜெ.,- ஜானகி அணிகள் என அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது.

1989 சட்டசபை தேர்தலில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெ., தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க.,வை ஜெ., ஒன்றிணைத்தார்.
ஆறு முறை முதல்வர்

அ.தி.மு.க, கூட்டணி 1991 சட்டசபை தேர்தலில் 225 தொகுதிகளில் வென்றது. ஜெயலலிதா முதன்முறை முதல்வரானார். பின் 2001, 2011ல் முதல்வரனார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆருக்குப்பின், தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016 செப்., 22ல் உடல்நலம் பாதிக்கப்பட, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.,5ல் மரணமடைந்தார்.

இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், தைரியமான பெண்மணி என பல சிறப்புகளை பெற்றவர்.
தேசிய விருது, பிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, தங்க தாரகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். ஐந்து பல்கலை சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர்.