புதுடில்லி ; பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது குறித்து காங்., சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறது.

பிப்.,1 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தும் இலக்கை எட்டுவது தொடர்பாக 40 பொருளாதார நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், வங்கியாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று (ஜன.,10) ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவில்லை. அதே சமயம் பா.ஜ., தலைமையகத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்.

பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளாதது குறித்து காங்., கேள்வி எழுப்பி உள்ளது. காங்., தனது டுவிட்டர் பக்கத்தில், #FindingNirmala என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி அத்துடன், அடுத்த ஆலோசனை கூட்டத்திற்காவது நிதியமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என கேட்டுள்ளது.
மற்றொரு டுவீட்டில், பிரதமரின் ஆலோசனை கூட்ட புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுகிறார்கள் என கேட்டுள்ளது. காங்., எம்.பி., சசிதரூர், நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன தான் நடக்கிறது என கேட்டுள்ளார்.

காங்.,ன் இந்த கேள்விகளுக்கு நிதியமைச்சகம், நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ., தரப்பில் பதிலளிக்கப்பட்டும் காங்., தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், டிச.,20 ம் தேதி ஏற்கனவே பொருளாதார நிபுணர்களை நிதியமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டார்.
அதன் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., நிர்வாகிகள் உடனான கூட்டமும், பொருளாதார ஆலோசனை கூட்டமும் ஒரே நாளில் நடைபெற்றதால், பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் தான் பங்கேற்காதது குறித்து பிரதமருக்கு முன்கூட்டியே நிர்மலா தகவல் அனுப்பி விட்டதாகவும், பிரதமர் அறிவுறுத்தலின் பேரிலேயே அவர் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் நிர்மலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
