Thursday, 9 January 2020

குடியுரிமை சட்ட விவகாரம்: ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை, விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று வெளிநடப்பு செய்தனர்.


 குடியுரிமை சட்ட விவகாரம்: ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை விவாதத்திற்கு எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு

தீர்மானம்

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, ''குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி, ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். ''அதன் நிலை என்ன என, நேற்று முன்தினம் கேட்டார். ஆய்வில் உள்ளதாக கூறினீர்கள். இன்று, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமா?'' என, கேட்டார்.அதற்கு சபாநாயகர், ''அந்தக் கடிதம், என் ஆய்வில் உள்ளது,'' என்றார். உடனே துரைமுருகன், ''கூட்டத்தின் கடைசி நாளான, இன்றும் ஆய்வில் உள்ளது என்றால், எப்போது ஆய்வு முடியும்?'' என, கேட்டார்.

அதற்கு சபாநாயகர், ''உரிய நேரத்தில் உரிய பதில் தரப்படும்,'' என்றார். அதைத் தொடர்ந்து, தீர்மானம் கொண்டு வராததை கண்டித்து, வெளிநடப்பு செய்வதாக, துரைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து, தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், வெளிநடப்பு செய்தனர்.சபாநாயகர் காரணம்இது குறித்து, துரைமுருகன் கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கேரள அரசு கண்டன தீர்மானம் நிறைவேற்றியது போல, தமிழக சட்டசபையிலும் தீர்மானம் கொண்டு வரக்கோரி, ஸ்டாலின் கடிதம் கொடுத்தார்.

அந்த தீர்மானம், சபாநாயகர் ஆயுளுக்கும் ஆய்வில் இருக்கும் போல தெரிகிறது. இதற்கு, சபாநாயகர் காரணம் அல்ல; அரசு அந்த தீர்மானத்தை கொண்டு வர அஞ்சுகிறது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் போட, இந்த ஆட்சிக்கு, 'தில்' இல்லை; முதல்வருக்கும் இல்லை. கேரளாவில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து, கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தன.சட்டசபை கூட்டத்தின் இறுதி நாளில், ஆய்வில் இருக்கிறது எனக் கூறி, எங்கள் தீர்மானத்திற்கு ஆயுள் முடிந்து விட்டது என, சபாநாயகர் மறைமுகமாக கூறுகிறார். அதை கண்டித்து, வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு, அவர் கூறினார்.