சென்னை: 'ஒரு பக்கத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு வேஷத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும் மறுபக்கத்தில் நீட் தேர்வு நடத்துவதும் அ.தி.மு.க.வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது' என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மாணவர்கள் மீது 'நீட்' நுழைவு தேர்வை மத்திய பா.ஜ. அரசு திணித்து வருகிறது. ஆனால் சட்டசபை விவாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. ஆட்சி காலத்தில் இருந்து நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் நீட் தேர்வை ஜெயலலிதா மறைவிற்கு பின் மத்திய பா.ஜ. அரசு தான் திணித்தது. 2016க்கு முன் தமிழகத்தில் நீட் தேர்வு இல்லை. எனவே நீட் தேர்வு திணிப்புக்கு பா.ஜ. அரசும் அ.தி.மு.க. அரசும் தான் முக்கிய பொறுப்பாகும்.
ஒரு பக்கத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு வேஷத்திற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும் மறுபக்கத்தில் நீட் தேர்வு நடத்துவதும் அ.தி.மு.க.வின் இரட்டை வேடம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
