சென்னை: ''கூவம் நதிக்கரையில் வசிப்போரை, மறு குடியமர்வு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - சேகர்பாபு: சென்னை நதிகள் பாதுகாப்பு திட்டத்தின்படி, துறைமுகம் தொகுதியில், கூவம் நதியை பாதுகாக்கும் நடவடிக்கையாக, காந்தி நகரில் வசிக்கும், 2,200 குடும்பத்தினரை, பெரும்பாக்கம் திட்டப் பகுதிக்கு மாற்றும் பணி நடந்து வருகிறது.இது குறித்து, ஏற்கனவே சட்டசபையில் பேசியபோது, அந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவோம் என, துணை முதல்வர் உத்தரவாதம் தந்தார்.
அவர்களுக்கு, வால்டாக்ஸ் சாலையில் உள்ள, ஐந்து ஏக்கர் நிலத்தில், குடியிருப்புகள் கட்டித் தரும்படி கோரினேன்.பணிகள் துவக்குவதற்கு முன், மக்களை இடமாற்றம் செய்யத் துவங்கி உள்ளனர். அதேபோல், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், கே.பி.கார்டனில், 864 வீடுகள் இருந்தன. தற்போது, 1,100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.கூவம் நதிக்கரையில் வசிப்போரின் குழந்தைகள், தற்போது பள்ளியில் படித்து வருகின்றனர்.
அவர்களை இடமாற்றம் செய்தால், அவர்களின் படிப்பு பாதிக்கும். பெரும்பாக்கம் பகுதியில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே, அவர்களுக்கு, கே.பி.கார்டனில் கட்டப்படும் வீடுகளை, ஒதுக்கித் தர வேண்டும்.சென்னையில், பல இடங்களில் வீடுகள் கட்டப்படுகின்றன. சாலையோரம் வசிப்போருக்கு, அங்கு வீடுகளை ஒதுக்கித் தர வேண்டும்.துணை முதல்வர் பன்னீர்செல்வம்: கூவம் நதிக்கரையில், 14 ஆயிரத்து, 257 குடும்பத்தினர் வசிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், 10 ஆயிரத்து, 740 குடும்பத்தினர், பெரும்பாக்கம், நல்லுார் போன்ற பகுதிகளில் குடியமர்த்தபட்டுள்ளனர். கடந்த, 2015ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 9,539 குடும்பங்களில், 4,398 குடும்பங்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளன. தீவுத்திடல் எதிரில் உள்ள சத்தியவாணிமுத்து நகர் பகுதியில், 2,092 குடும்பங்களை, மறு குடியமர்வு செய்யும் பணி, கடந்த மாதம் துவக்கப்பட்டது. டிச., 29ல், 129 குடும்பத்தினர், பெரும்பாக்கம் பகுதிக்கு சென்றனர். மறுநாள், 19 குடும்பத்தினர் சென்றனர். அப்போது, பள்ளிக்கு குழந்தைகள் செல்வதால், ஏப்ரல் மாதம் வரை அவகாசம் கேட்டதால், மறு குடியமர்வு நிறுத்தப்பட்டது.
ஆனால், பள்ளி செல்லும் குழந்தைகள் இல்லாத குடும்பத்தினர், மறு குடியமர்வு செல்ல விருப்பம் தெரிவித்தனர். அவர்களை மறு குடியமர்வு செய்யும் பணி, 2ம் தேதி துவக்கப்பட்டது.அவர்கள் பொருட்களை எடுத்து செல்ல, மாநகராட்சி வாகன உதவி செய்யப்பட்டுள்ளது.மறு குடியமர்வு செய்யப்படுவோருக்கு, மூன்று நாட்கள் உணவு வழங்கப்படுவதுடன், 5,000 ரூபாய் இடமாற்ற வழங்கப்படுகிறது. ஓராண்டுக்கு மாதம், 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி என, அனைத்து வசதிகளும் உள்ளன. அவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றின் முகவரிகளை மாற்றவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு, விவாதம் நடந்தது.
