Thursday, 9 January 2020

3.50 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை

சென்னை: ''ஐந்து லட்சம் பேருக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 1.56 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு, பதில் அளித்து, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.


அப்போது நடந்த விவாதம்:முதல்வர்: தமிழகத்தில், முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஐந்து லட்சம் பேருக்கு, முதியோர் உதவித்தொகை வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள், நேரடியாக கிராமங்களுக்கு சென்று, மனுக்களை பெற்றனர். அவ்வாறு பெறப்பட்ட, ஒன்பது லட்சம் மனுக்களில், 5.06 லட்சம் மனுக்களுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தில், 1.56 லட்சம் பேருக்கு, உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 3.50 லட்சம் பேருக்கு, முதியோர் உதவித்தொகை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: முதல்வர் கூறுவதை கேட்கும்போது, மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நடைமுறை வேறாக உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை கடிதம் கொடுத்தால், தற்போது உதவித்தொகை பெறுவோரில், யாரேனும் இறந்தால் வழங்குவதாக, தாசில்தார் கூறுகிறார். நீங்கள் கூறுவதற்கும், நடைமுறைக்கும் வேறுபாடு உள்ளது.

முதல்வர்: இப்படிப்பட்ட குறைபாட்டை நீக்கத்தான், ஐந்து லட்சம் பேருக்கு, உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீங்கள் தகுதியான நபர்களுக்கு, பரிந்துரை செய்தால், ஓய்வூதியம் வழங்கப்படும். எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்ல, முதியோர் நேரடியாக மனு கொடுத்தாலும், அதை நிறைவேற்ற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில், அரசியல் கிடையாது.ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற, பாகுபாடு கிடையாது. தகுதியானவர்களுக்கு, முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.