Thursday, 9 January 2020

வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி



சென்னை: ''கன்னியாகுமரி மாவட்டத்தில், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ., வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்கப்படும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.


சட்டசபையில், அவர் கூறியதாவது:கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, சிறப்பு எஸ்.ஐ., வில்சன் பணியில் இருந்தார். இரவு, 9:30க்கு, அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தப்பிச் சென்றனர்.

வில்சனை மருத்துவமனைக்கு போலீசார் துாக்கிச் சென்றனர்; அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். தெற்கு மண்டல டி.ஐ.ஜி., - மாவட்ட எஸ்.பி., மற்றும் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர். 

டி.ஜி.பி.,யும் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்ய, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர, அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். வில்சனுக்கு, மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு, தகுதிக்கேற்ற, கருணை அடிப்படையில், அரசு பணி வழங்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.