Thursday, 9 January 2020

மாநகராட்சியில் தரைவழி கேபிள்: அமைச்சர் தங்கமணி உறுதி

சென்னை: ''மாநகராட்சி பகுதிகளில், படிப்படியாக, தரைவழி கேபிள் வாயிலாக மின்சாரம் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.


சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - மெய்யநாதன்: ஆலங்குடி தொகுதி, கத்தக்குறிச்சி ஊராட்சி, கண்ணாயப்பட்டியில் புதிய மின்மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் தங்கமணி: ஏற்கனவே இரண்டு மின்மாற்றிகள் உள்ளன. புதிதாக, ஒரு மின்மாற்றி அமைக்கப்படும்.மெய்யநாதன்: என் தொகுதியில், 20 ஊராட்சிகளில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான, 4 ஏக்கர் நிலம், மின் வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

அமைச்சர் தங்கமணி: டெல்டா மாவட்டங்களில், மின்னழுத்த குறைபாடு பிரச்னை உள்ளது. நீண்ட துாரம் செல்லும் மின் கம்பிகள் தான், இதற்கு காரணம். இடமிருந்தால் ஆய்வு செய்து, துணை மின் நிலையம் அமைக்கப்படும்.தி.மு.க., - கார்த்திகேயன்: வேலுார் மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை, தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற வேண்டும்.அமைச்சர் தங்கமணி: மாநகராட்சி பகுதிகளில், மின் கம்பிகளை படிப்படியாக, தரைக்கு அடியில் செல்லும் வகையில் மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறையுடன் கலந்து பேசி, வேலுார் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், தரை வழி கேபிள்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.