புதுடில்லி: பொருளாதார வல்லுனர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்த, முயற்சி எடுக்க வேண்டும்,” என, கேட்டுக்கொண்டார்.
வரும், ஜனவரி, 31ம் தேதி, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. பிப்ரவரி, 1ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020 - 21ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

ஆலோசனை:
அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில், நிதியமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட பொருளாதார மற்றும் தொழில் வல்லுனர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஆலோசனை நடத்தினார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், அதன் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்த வேண்டும் என்பது, திடீரென தோன்றியது அல்ல. நாட்டின் பொருளாதார வலிமையை ஆழமாக புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டது.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியாவை, 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்த வேண்டும் என்பது, திடீரென தோன்றியது அல்ல. நாட்டின் பொருளாதார வலிமையை ஆழமாக புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் திட்டமிடப்பட்டது.
இலக்கு:
சுற்றுலா, நகர்ப்புற வளர்ச்சி, உள்கட்டமைப்பு, விவசாயம் ஆகிய துறைகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான, அதிக ஆற்றலை கொண்டுள்ளன. இது, நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் திறனையும் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்தால், நம் இலக்கை எளிதில் அடையலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
பொருளாதார பிரச்னை குறித்து வல்லுனர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, வளர்ச்சியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இரண்டரை மணிநேரம் நடைபெற்ற, அந்த ஆலோசனைக் கூட்டத்தில், 5 சதவீதமாக குறைந்துள்ள பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பொருளாதார வல்லுனர்கள் சில வழிகளை கூறினர்.
அதன்படி, கடன் விரிவாக்கம், ஏற்றுமதி வளர்ச்சி, பொதுத்துறை வங்கிகளை நிர்வகித்தல், நுகர்வை அதிகரித்தல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என, மத்திய அரசுக்கு, அவர்கள் அறிவுரை வழங்கினர். வல்லுனர்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக, பிரதமர் மோடி, அவர்களிடம் உறுதி அளித்தார்.பா.ஜ., கட்சியும், பட்ஜெட்டுக்கு முன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்புகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறது.
பரிந்துரைகள்:
இந்த ஆலோசனைக் கூட்டங்கள் குறித்து, பா.ஜ., செய்தித்தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா கூறியதாவது: மத்திய பட்ஜெட், மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும். தொழிலதிபர்கள், விவசாய அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினருடனும் கலந்தாலோசித்து, பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை பெற்று வருகிறோம். இதன் அடிப்படையில், 11 ஆலோசனைக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், ஏழு கூட்டங்கள், கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டன. ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகள், பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
