Thursday, 9 January 2020

எம்.எல்.ஏ.க்கள் தொகுதி நிதி விருப்பப்படி செலவிட அனுமதி?

சென்னை: ''தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏ.க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்'' என முதல்வர் பழனிசாமி கூறினார்.


சட்டசபையில் நடந்த விவாதம்: எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிடுவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.குறிப்பிட்ட பணிகளுக்கு குறிப்பிட்ட சதவீத நிதியை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியில் செய்யப்படும் பணிகளுக்கு ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்யப்படுகிறது.நிதியை நாங்கள் எடுத்துக் கொள்ளப்போவது இல்லை. எங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு சாலை உள்ளிட்ட பணிகளை செய்து தரப் போகிறோம். எனவே நிதியை செலவிடுவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி: தொகுதி மேம்பாட்டு நிதியை 3 கோடி ரூபாயாக முதல்வர் பழனிசாமி உயர்த்தி வழங்கியுள்ளார்.

இந்த நிதியை செலவிடுவதில் சில வரைமுறைகள் உள்ளன. இது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் விருப்பப்படி தொகுதிக்கு செலவிடலாம் என்ற கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

துரைமுருகன்: முதல்வர் இப்போதே அதை கூறினால் நன்றாக இருக்கும்.முதல்வர்: தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏ.க்கள் விருப்பப்படி செலவிட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

இதுதொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்படும்.எந்த அளவிற்கு சாத்தியம் என்பது குறித்து பேசி சாதகமாக்க முயற்சி செய்கிறேன்.இவ்வாறு விவாதம் நடந்தது.