புதுடில்லி: கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு எஸ்.சி. எனப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தலித் கிறிஸ்தவர்களுக்கான தேசிய கவுன்சில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தினருக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான சலுகைகள் வழங்கப்படுவதில்லை.மதம் மாறுவதால் மட்டுமே ஒருவரது சமூக பொருளாதார நிலை மாறிவிடாது. எனவே கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான அந்தஸ்து வழங்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த மனு மீது 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய சமூக நீதித்துறை, தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய கமிஷன், சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் ஆகியவைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்க உத்தரவிட்டனர்.
