Wednesday, 8 January 2020

பொருளாதாரத்தை அழிக்கும் முயற்சியே ஸ்டிரைக் : மம்தா விளாசல்

கோல்கட்டா : அரசியல் இருப்பு இல்லாதவர்கள் ஸ்டிரைக் நடத்தி மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.




பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.,8) தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல அரசிய் கட்சிகள், அமைப்புகள் , வங்கி ஊழியர்கள் உட்பட பல்வேறு துறையினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் போராட்டம் நடந்தாலும் பெருமளவில் பாதிப்புகள் இல்லை. ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் உள்ளிட்டவற்றதல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருவளவில் பாதித்துள்ளது.


இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ்களின் கண்ணாடி உடைப்பு, வாகனங்களுக்கு தீவைப்பு, பொது சொத்தை சேதம் விளைவிப்பது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.


இது தொடர்பாக மாநில முதல்வர் மம்தா கூறுகையில், 'மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சியை நாடு முழுவதும் செயல்படுத்தும் திட்டம் என வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான காரணங்களை நான் ஆதரிக்கிறேன். ஆனால், எனது திரிணமுல் கட்சியும், எங்களது அரசாங்கமும் இந்த முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்காது.

எந்த அரசியல் இருப்பும் இல்லாதவர்கள் தான் இது போன்ற போராட்டங்களை தூண்டி மலிவான அரசியல் செய்கின்றனர். மேற்கு வங்கத்தில் இதுபோன்ற வன்முறையை தூண்டும் போராட்டத்தை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதன்மூலம் குறுக்கு வழியை விரும்புகின்றனர்.' இவ்வாறு அவர் கூறினார்.