Wednesday, 8 January 2020

துணை மின் நிலையம் அமைக்க இடம் கேட்கிறார் அமைச்சர்

சென்னை: 'துணை மின் நிலையங்கள் அமைக்க, தனியார் இடம் கொடுத்தால், மின் வாரியம் தயாராக உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - நரசிம்மன்: திருத்தணி தொகுதி, பூனிமாங்காடு கிராமத்தில், துணை மின் நிலையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் தங்கமணி; தற்போதைக்கு தேவையில்லை. கூடுதல் மின்மாற்றி அமைக்கப்படும். 

எதிர்காலத்தில் தேவைப்பட்டால், துணை மின் நிலையம் அமைக்கப்படும்.நரசிம்மன்: திருத்தணி நகராட்சிப் பகுதியில், குறைந்த மின் அழுத்த பிரச்னை உள்ளது. அங்கு துணை மின் நிலையம் அமைக்க, இடம் உள்ளது. 

அதற்கான பணமும் செலுத்தப்பட்டு விட்டது. விரைவில், பணியை துவக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: உடனடியாக துவக்கப்படும்.தி.மு.க., - அரவிந்த் ரமேஷ்: சென்னையில், மடிப்பாக்கம், உள்ளகரம் புழுதிவாக்கம் பகுதிகளில், அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. 

அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோரிடம் நிலம் பெற்று, துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். மடிப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னை உள்ளது. அங்கு துணை மின் நிலையம் அமைக்க இடம் இல்லை. எனவே, பள்ளிகரணையில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: கட்டுமான நிறுவனங்களிடம், துணை மின் நிலையம் அமைக்க, இடம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளோம்; மறுத்து வருகின்றன.

இடமிருக்கும் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்கப்படும். தனியார் இடம் கொடுத்தால், அதை வாங்கிக் கொள்ள, மின் வாரியம் தயாராக உள்ளது.தி.மு.க., - நந்தகுமார்: அணைக்கட்டு தொகுதியில், மூன்று மலை கிராமங்கள் உள்ளன. அங்கு காற்று வீசினாலே, மின் தடை ஏற்படுகிறது. எனவே, அந்த கிராமங்களில், துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: இடம் கிடைத்ததும், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.