Wednesday, 8 January 2020

போர் அபாயம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு

புதுடில்லி: அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை 3.5 சதவீதம், அதாவது ஒரு பீப்பாய் 71 டாலராக உயர்ந்துள்ளது.



ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ரத்து செய்ததையடுத்து அமெரிக்கா, ஈரானுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதி குவாசிம் சுலைமானியை, அமெரிக்க படைகள் கொன்றது. இதனால் இருநாடுகளிடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரானுக்கு ஆதரவாக ஈராக் செயல்பட்டு வருகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஈரான் அருகேயுள்ள ஹோர்மூஸ் ஜலசந்திதான் உலகில் 40 சதவீதம் எண்ணெய் வர்த்தகம் நடக்கும் இடம். மேலும், தாக்குதல் நடந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை அதிகரித்து 71 டாலராக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையும் உயரும் என கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலை உயர்வை உலக நாடுகள் அனுமதிக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.