Wednesday, 8 January 2020

ஈரான் தாக்குதலில் பாதிப்பு கிடையாது: டிரம்ப் உறுதி

வாஷிங்டன் : ஈரான் தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்த பாதிப்பு இல்லை எனவும், வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறினார். மேலும் ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.






ஈரான் தாக்குதல்

ஈரான் ராணுவத்தில் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஈராக்கில் கொன்றன. இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

மிரட்டக்கூடாது

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். ராணுவ தளம் மட்டும் சிறிய அளவில் சேதம் அடைந்தது. முன்னரே எச்சரிக்கும் சாதனங்கள் உள்ளதால், நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம். அமெரிக்காவை மிரட்டுவதை ஈரான் நிறுத்த வேண்டும்.


பயங்கரவாத நாடு

அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. உலகின் பெரிய பயங்கரவாதியை நாங்கள் வீழ்த்தியுள்ளோம். ஈரானுக்கு வலிமையான செய்தியை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு சுலைமானி பயிற்சி அளித்துள்ளார். ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் அவர் கொன்றுள்ளார். அவரை எப்போதோ கொன்றிருக்க வேண்டும். பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உள்நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாட்டிலும் பயங்கரவாதிகளை அந்நாடு ஊக்குவிக்கிறது. இது போன்ற செயல்களை ஈரான் நிறுத்த வேண்டும்.

பொருளாதார தடை

அணு ஆயுத கனவை, ஈரான் கண்டிப்பாக கைவிட வேண்டும். அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அந்நாட்டின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. நான் அதிபராக இருக்கும் வரை அதனை அனுமதிக்க மாட்டேன். ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்போம். அந்நாட்டை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும். நேடோ அமைப்பு முன்பைவிட அதிகளவில் பங்கெடுக்க வேண்டும்.


கச்சா எண்ணெய் தேவையில்லை



முன்பை விட அமெரிக்க ராணுவம் வலிமை பெற்றுள்ளது. எங்களிடம் அதிநவீன, வலிமையான ஆயுதங்கள் உள்ளது. சிறந்த ராணுவம் மற்றும் தளவாடங்கள் உள்ளன. அதற்காக, நாங்கள் அதனை பயன்படுத்த போகிறோம் என்பது அர்த்தமல்ல. ஈரானுக்கு எதிராக ராணுவம், ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை. ஐ.எஸ்., பயங்கரவாதிகளை நாங்கள் அழித்துள்ளோம். இது ஈரான் நலனுக்கும் உகந்தது. உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கா விரும்புகிறது. அதற்காக உழைக்க தயாராக உள்ளோம். அதிகளவு கச்சா எண்ணெயை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.