Wednesday, 8 January 2020

மத்திய பட்ஜெட்டுக்கு ஆலோசனை வழங்க மோடி அழைப்பு!

புதுடில்லி : 'வரும், 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 'மைகவ்' இணையதளத்திலும், 'டுவிட்டர்' சமூக வலைதளத்திலும் மக்கள் ஆலோசனைகளை வழங்கலாம்' என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு இரண்டாவது முறை அமைந்த பிறகு, இரண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும், பிப்., 1ல் இது தாக்கல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுவரை, தேதி அறிவிக்கப்படவில்லை. பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு இது இரண்டாவது பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட் தயாரிப்பதற்காக பல்வேறு அமைப்புகளுடன், துறைகளுடன், நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் வேலைவாய்ப்பு களை உருவாக்குவது குறித்து, பல்வேறு தொழில்அதிபர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

PM,Modi,Budget,PrimeMinister,மத்திய_பட்ஜெட், ஆலோசனை, மோடி, அழைப்பு, கருத்து
5 சதவீதம்
நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்களான, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, சுனில் மிட்டல் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் நிலையில், 'நடப்பு 2019 - 20ம் நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 5 சதவீதமாக இருக்கும்' என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாகும். கடந்த, 2009ல், உலகெங்கும் பொருளாதார மந்த நிலை நிலவியபோது, நம், ஜி.டி.பி., 3.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு, 6.8 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதிஆண்டில், 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை, பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
'மைகவ்' இணையதளம்
இந்நிலையில், 'மத்திய பட்ஜெட் குறித்து, பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்' என, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து இருந்தது. மைகவ் இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதை மறுபதிவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: மத்திய பட்ஜெட் என்பது, நாட்டின், 130 கோடி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாகவும் அது அமைந்து உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம். வேளாண்மை, கல்வி உள்பட பல்வேறு துறைகள் குறித்த கருத்துகளை மைகவ் இணையதளத்தில் பதிவிட, மக்களை அழைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே, பட்ஜெட் தயாரிப்பில், மக்களும் பங்கேற்கும் வகையில், அவர்களுடைய ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டு வந்துள்ளது.
எப்படி பங்கேற்கலாம்
மைகவ் இணையத்தில், மக்கள் தங்களுடைய கருத்துகளை, வரும், 20ம் தேதிக்குள் பதிவிடலாம். இதை செய்வது மிகவும் சுலபம். இந்த இணையதள பக்கத்தில், ஏற்கனவே பதிவு செய்தவர்கள், அதில் நுழைந்து கருத்துகளை பதிவிடலாம். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் அல்லது பதிவு செய்ய விரும்பாதவர்கள், தங்களுடைய சமூக வலைதள முகவரியைக் கொண்டு உள்நுழைந்து, கருத்துகளை பதிவிடலாம்.