பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தமிழகம் உள்ளிட்ட அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள உரிமை உள்ளது' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, மாநில அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது, விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், கூறியிருப்பதாவது:சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய ஏழை மக்கள் பயன்பெறும் நோக்கத்தில், இந்த, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, மத்திய அரசு அறிவித்தது.இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும், தாங்களே முடிவு செய்து கொள்ள உரிமை உள்ளது. இதில், மத்திய சமூக நீதித்துறை தலையிட முடியாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
