Wednesday, 8 January 2020

பொது துறை பங்கு விற்பனை அமைச்சரவை குழு ஒப்புதல்

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, ஆறு நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இது குறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:கூட்டத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, நீலாச்சல் இஸ்பட் நிகம் உருக்கு நிறுவனத்தின் விற்பனைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்நிறுவனத்தில், எம்.எம்.டி.சி., - ஓ.எம்.சி., - ஐ.பி.ஐ.சி.ஓ.எல்., - என்.எம்.டி.சி., மெகான் மற்றும் பி.எச்.இ.எல்., ஆகிய ஆறு நிறுவனங்கள், குறிப்பிடத்தக்க பங்கு மூலதனத்தை கொண்டுள்ளன. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அனுமதி அளித்ததையடுத்து, இந்த ஆறு நிறுவனங்களும், நீலாச்சல் இஸ்பட் நிகம் நிறுவன பங்குகளை விற்பனை செய்யும். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், தேசிய போக்குவரத்து கொள்கை மற்றும் சரக்கு போக்குவரத்து திட்டங்களை உருவாக்க, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான விதிமுறைகளை, அமைச்சரவைக் குழு பார்வையிட்டது. குழாய் மூலம் எரிவாயுஅசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், 1,656 கி.மீ., துாரம், குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு தரவும், வாகனங்களுக்கு, இயற்கை எரிவாயு சப்ளை செய்யவும், 5,559 கோடி ரூபாய் ஒதுக்க, ஒப்புதல் தரப்பட்டது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள, ஆயுர்வேத போதனை மற்றும் ஆய்வு மையத்திற்கு, 'தேசத்தின் முக்கிய மையம்' என்ற அந்தஸ்து வழங்க, கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த, 2018ல், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் இந்தியா வந்தபோது, இரு நாடுகள் இடையே, மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், திறன் வல்லுனர்களை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த திட்டத்திற்கும், அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.பில் அண்டு மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன், பிரசவ கால சிசு இறப்பு விகிதத்தை குறைத்து, கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்குவது உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்பு திட்டத்திற்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.