
சென்னை: சட்டசபையில் இன்று நடந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கும், உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அமைச்சரவை பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால், அவரை சட்டசபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, அமைச்சரை , ஒருமையில் அன்பழகன் பேசியது தவறுதான். ஆனால், அதேவார்த்தையை உள்ளாட்சி துறை அமைச்சரும் பேசியுள்ளார். இதற்கு சபாநாயகர் என்ன பதில் அளிப்பார்? என கேள்வி எழுப்பினார். ஜெ. அன்பழகன் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் வருத்தம் தெரிவித்ததால், மறப்போம் மன்னிப்போம் என ஓ.பி.எஸ்., பேசினார். எனவே, இந்த விவகாரத்தில் ஜெ. அன்பழகன் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல், எச்சரிக்கை மட்டும் செய்தார்.
அதேசமயம், கவர்னரின் உரையை கிழித்து சபாநாயகரின் இருக்கை முன் வீசியதால், ஜெ.அன்பழகன் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கூறினார்.
