Tuesday, 7 January 2020

ரூ.2,000 கோடியில் சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம்: சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு

                                     TamilNadu,Governor,TN,சட்டசபை,கவர்னர்,பன்வாரிலால்,ஆளுநர்

சென்னை: ''தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் 2000 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட உள்ளது'' என கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.


சட்டசபையில் அவர் பேசியதாவது: பல்வேறு தடைகள் வந்தபோதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்படுவதை அரசு உறுதி செய்தது. மீதமுள்ள 10 மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகத்திற்குள் பாய்கிற நதிகளை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் விதமாக காவிரி - குண்டாறு ஆறுகள் இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும்.

முதல் கட்டமாக முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி காவிரி - தெற்கு வெள்ளாறு இணைப்பு திட்டம் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டம் தலைவாசலில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லுாரிக்கு முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

மாநிலம் முழுவதும் அகண்ட அலைவரிசை இணைய வசதிகளை அதிகரிக்க 1,815 கோடி ரூபாய் மதிப்பில் 'பாரத்நெட்' திட்டத்திற்கு தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இத்திட்டம் மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளை இணைக்கும். அடுத்த கட்டமாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை இணைக்க 'தமிழ்நெட்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு திட்டம் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் வழியே உலகத் தரத்திலான உட்கட்டமைப்புகளுடன் ஆறு சுற்றுலா வட்டங்களில் 295 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். மாநில போக்குவரத்து கழகங்கள் மின்சார வாகனங்களை பெருமளவில் இயக்கவுள்ளன. கொசு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச கொசுவலைகள் வினியோகிக்கப்படும்.

கல்லுாரி இடைநிற்றல் மாணவர்களில் ஒரு லட்சம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் அவர்கள் தங்களின் உயர் கல்வி படிப்பை நிறைவு செய்யலாம் அல்லது உரிய வேலைவாய்ப்பை கண்டறியலாம். நடப்பாண்டில் மாநிலத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு முழுமையாக பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வருக்கு பாராட்டு:
முதல்வர் பழனிசாமிக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்தார். அதன் விபரம்: மத்திய அரசால் முதல் முறையாக வெளியிடப்பட்ட நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டு பட்டியலில் நாட்டில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக முதல்வரை பாராட்டுகிறேன். தமிழகத்தை இந்தியாவிலே முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் குறிக்கோளை இந்த அரசு அடைந்துள்ளது. தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட இந்த ஆண்டும் குடும்பம் ஒன்றுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு நன்றி:
தன் உரையில் மத்திய அரசுக்கு கவர்னர் நன்றி தெரிவித்தார். அதன் விபரம்: இந்தியாவின் பால் உற்பத்தி தொழில் துறையை பாதுகாக்கும் வகையில் ஆசியான் அமைப்பு மற்றும் பசிபிக் நாடுகளுடன் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து போடாததற்கு நன்றி. பாக் வளைகுடாவில் இழுவை வலை மீன்பிடிப் படகுகளை ஆழ்கடல் சூரை மீன்பிடிப் படகுகளாக மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு உதவி அளித்துள்ளதற்கு நன்றி. இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

உதவி செய்த ஆந்திர அரசு:

கவர்னர் உரையில் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சென்னை குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கண்டலேறு நீர்தேக்கத்திலிருந்து நீரை திறந்து விடும்படி ஆந்திர முதல்வரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டது. உரிய நேரத்தில் உதவி செய்த ஆந்திர அரசுக்கு நன்றி என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது.