Tuesday, 7 January 2020

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு: 'கோவிந்தா' கோஷத்துடன் பரவசம்

                                    சொர்க்கவாசல்,திறப்பு,கோவிந்தா

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் கோவில்களில் நேற்று திறக்கப்பட்டது.

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்ஸவமாக வைணவர்கள் கொண்டாடுவர். அன்று திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பெருமாள் கோவில்களில் நேற்று திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீரங்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டார்.

அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது அங்கு விடிய, விடிய விழித்திருந்து நம்பெருமாளை தரிசிக்க காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது.

நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. சொர்ககவாசல் திறப்பு விழாவையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

இன்று முதல் எட்டு நாட்களுக்கு பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

திருமலை

திருப்பதி திருமலையில் நேற்று அதிகாலை 1:15 மணிக்கு வைகுந்த வாயில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டது. முதலில் முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை தரிசித்து வைகுண்ட வாயில் வழியாக சென்றனர். அதன்பின் 3:45 மணிக்கு தர்ம தரிசனம் துவங்கப்பட்டது. 20 மணி நேரமாக காத்திருந்த பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்து வைகுண்ட வாயில் வழியாக சென்றனர்.

திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று காலை தங்கதேரில் உற்ஸவமூர்த்திகள் வலம் வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் மாடவீதியில், தங்கதேரில் வலம் வந்தார். இன்று நள்ளிரவு 12:00 மணி வரை பக்தர்களுக்கு வைகுந்த வாயில் தரிசனம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.