Monday, 6 January 2020

ரேஷன் கடைகளில் வெளிநபருக்கு தடை

சென்னை: ரேஷன் கடைகளில், வெளிநபரை அனுமதிக்க கூடாது; மீறி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது.



தமிழகத்தில், 33 ஆயிரம் ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்களும்; 2,000 கடைகளை, நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன. இவற்றை, உணவு துறையின் கீழ் இயங்கும், உணவு வழங்கல் துறை கண்காணிக்கிறது. பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், நாளை மறுநாள் முதல், அரிசி கார்டுதாரர்களுக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கம் அடங்கிய, பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனால், ஆளும் கட்சியினர், ரேஷன் கடைகளுக்குள் நுழைந்து, தங்கள் முன்னிலையில், பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என, கடை ஊழியர்களிடம் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.

அவ்வாறு செய்தால், தங்கள் கட்சியினருக்கு, பரிசு தொகுப்பு வழங்குவதில், முன்னுரிமை அளிப்பர் என்ற அதிருப்தி, மக்களிடம் எழுந்துள்ளது. இதனால், பொங்கல் பரிசு வினியோகத்தில், குழப்பம் ஏற்படாமல் இருக்க, கடைகளுக்குள் வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது என, ரேஷன் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அத்துமீறி கடைகளுக்குள் வருவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மாவட்ட இணை பதிவாளர்கள் மற்றும் வழங்கல் அதிகாரிகளிடம், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை தெரிவித்துள்ளது